ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு முன்னுரிமை

ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாற்றுத்திறனாளி வக்கீல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-12-08 18:55 GMT

மதுரை, 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் உள்ள நிலத்தை சர்வே செய்யக்கோரி காளீஸ்வரி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிலத்தை சர்வே செய்ய அதிகாரிகளுக்கு கடந்த 26.8.2022 அன்று உத்தரவிட்டார். இந்தநிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மாலதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடரப்பட்டு, அதன்பேரில் உரிய ஆய்வு நடத்த வக்கீல் கமிஷனர் நியமிக்கப்பட்டு உள்ளார். மனுதாரரின் கோரிக்கையும் ஏற்கப்படுகிறது.

நமது இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி கடந்த 3-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடினோம். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எந்தவித தடையும் இன்றி அணுக நாம் உதவியாக இருக்க வேண்டும். இதை நம் வீட்டில் இருந்தே தொடங்கினால் நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும். எனவே எதிர்காலத்தில் ஆய்வு பணிகளை நடத்த வக்கீல் கமிஷனரை நியமிக்கும்போது, மாற்றுத்திறனாளி வக்கீல்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என கீழ்கோர்ட்டுகளுக்கு அறிவுறுத்துகிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்