புதிய கடைகள் ஒதுக்கீட்டில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் புதிய கடைகள் ஒதுக்கீட்டில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் புதிய கடைகள் ஒதுக்கீட்டில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
நகராட்சி மார்க்கெட்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,327 கடைகள் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள் என்பதால், 3 கட்டங்களாக பிரித்து பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதற்காக கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 192 கடைகளை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே சென்னையில் இருந்து வந்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு கடை வைக்க மாற்றிடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதிய கடைகள் ஏலம் முறையில் ஒதுக்கப்படும் என தகவல் பரவியது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மார்க்கெட் வியாபாரிகள் பழைய கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்ததுடன், கருப்பு சட்டை அணிந்து வியாபாரம் செய்தனர். மேலும் கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதால் புதிய கட்டிடங்கள் கட்டும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று மார்க்கெட் வியாபாரிகள் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நீலகிரி எம்.பி. ஆ.ராசாவை முற்றுகையிட்டு பிரச்சினை குறித்து தெரிவித்தனர். அதன் பின்னர் அவர், கலெக்டர் அம்ரித் ஆகியோர் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாற்றிடத்தில் கடை அமைக்க எம்.பி. நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து தற்காலிகமாக கடை அமைத்து தரவும், புதிய கடைகள் கட்டிய பின் 192 வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.