கோவில்களில் பிரதோஷ வழிபாடு
போடி பகுதியில் உள்ள கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
போடி,
ஆனி மாத சனி மகா பிரதோஷத்தையொட்டி, நேற்று போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சிவ பெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு முந்திரி, திராட்சை உள்ளிட்ட பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல், பரமசிவன் மலைக்கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பிச்சாங்கரை கீழசொக்கநாதர் கோவில், மேலசொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.