சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-03 19:59 GMT

பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ சிறப்பு வழிபாடு

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

நெசவாளர் நகர்

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவாணேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அரூர்

அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரி சமேத வாணீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள், உள்ளிட்டவற்றை கொண்டு அர்ச்சனைகளும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ வாணீஸ்வரர் வழிபாடு சங்கம் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் நாகராஜ், ரகு, சதீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளியில் சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பையர்நத்தம்

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் வழிபட்டனர்.

பையர்நத்தம் அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பையர்நத்தம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்