திருப்புவனம்
திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேஸ்வரர்- சௌந்திரநாயகி அம்மன் கோவில். இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்டது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமய புலவர்களால் பாடல் பெற்ற புண்ணிய தலமாகும். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு பிரதோஷம் வழிபாடு சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலின் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிறகு சுவாமி-அம்பாள் கோவிலின் உள் ஆடி வீதியில் வலம் வந்து நந்திக்கு காட்சியளித்தனர். சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை செய்து பின்னர் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்