கோத்தகிரி சக்திமலை சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை
கோத்தகிரி சக்திமலை சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் சிவன் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறும். இதையொட்டி மார்கழி மாத முதல் பிரதோஷ நாளான நேற்று முன்தினம் கோத்தகிரி சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் காலை 10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது.
மாலை 3 மணிக்கு சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர். இதேபோல்கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.