சமையலர்களுக்கு பயிற்சி
பாலக்கோட்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைக்கும் சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பாலக்கோடு:
தமிழக முதல்-அமைச்சரின் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் உணவு தயாரிக்கும் சமையலருக்கான பயிற்சி பாலக்கோடு மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்று பேசினார். மாவட்ட மேலாண்மை உதவி திட்ட இயக்குனர் பெரியநாயகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு சமைக்கும் சமையலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்றுனர் கார்த்திக் பயிற்சி அளித்தார். உணவு தயாரிக்கும் மற்றும் உணவு பொருட்கள் சேமிப்பு இடங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமேகலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனிமுத்து மற்றும் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் போது முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படவும், உணவு தரமாகவும், சுகாதாரமாகவும், சத்தாகவும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மகளிர் குழு இத்திட்டத்தை திறம்பட கையாள வேண்டும். விரைவில் மீதமுள்ள பள்ளி சமையலர்க்கும் பயிற்சி அளிக்கப்படும். உணவு தயாரிக்கும் கூடத்தில் தினமும் மாதிரி உணவு எடுத்து வைக்க வேண்டும். உணவு பொருட்கள் காலாவதி தன்மை கவனித்து உபயோகிக்க வேண்டும் என்று சமையலர்களுக்கு அறிவுறுத்தினர். முடிவில் வட்டார வள மைய மேலாளர் சிவலிங்கம் நன்றி தெரிவித்தார்.