பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை பயிற்சி

தர்மபுரியில் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை பயிற்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

Update: 2022-07-06 16:35 GMT

தர்மபுரியில் ஜவகர் சிறுவர் மன்றம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை பயிற்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

இது தொடர்பாக கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலை பயிற்சி

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் கலை பயிற்சி பெறும் வகையில் பகுதி நேரமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலமாக கட்டணமில்லா கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்திலும் ஜவகர் சிறுவர் மன்றம் இயங்கி வருகிறது.

இங்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன்படி இந்த மன்றத்தின் பயிற்சி வகுப்புகள் தர்மபுரி அப்பாவு நகர் அரசு நகராட்சி தொடக்கப்பள்ளியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது.

கட்டணம் இல்லை

இந்த பயிற்சியில் 5 முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் சேரலாம். இந்த பயிற்சிக்கு கட்டணம் இல்லை. இந்த மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவர், சிறுமிகள், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம் செயல்முறை பயிலரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம். பாரம்பரியம் மிக்க கலைகளில் பயிற்சியை பெறும் வாய்ப்பை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்