உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி
தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட அளவிலான இந்த பயிற்சி முகாம் தொடக்க விழா தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்றார். இந்த பயிற்சி முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு செஸ் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, உதவி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், மாவட்ட செஸ் சங்க துணைத்தலைவர் டாக்டர் ராஜேஷ், மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.