மின் கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காது
மின் கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காது என்று கோவை புத்தக திருவிழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
மின் கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்காது என்று கோவை புத்தக திருவிழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
புத்தக திருவிழா
கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா), தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 6-வது ஆண்டு கோவை புத்தக திருவிழா-2022 கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
10 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் 250 பதிப்பாளர்கள் மூலம் 2½ லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த விழாவின் ஒரு பகுதியாக வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பாதிப்பு இல்லை
தமிழகத்தில் மின்சார வாரிய நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சீர்கேடே காரணம் ஆகும். மின் மிகை மாநிலம் என்று பொது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிரசாரம் முன் வைக்கப்பட்டது.
மின் மிகை மாநிலம் என்றால் 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக 21 ஆண்டுகள் காத்திருந்தனர். இந்த மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.
மாதாந்திர மின்கட்டணம்
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி உள்ளோம். அடுத்த கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.
தற்போது மின் கட்டணம் மாற்றத்தின் மூலமாக 2 கோடியே 28 லட்சம் பேருக்கு நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரான்ஸ்பார்மரில் மீட்டர் பொருத்தம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு டெண்டர் வரை சென்று உள்ளது. எனவே மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நடந்த விழாவில் 3 பேருக்கு இளம் படைப்பாளர் விருதை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.