3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன; பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
மின்கம்பங்கள்
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் மசூதி தெருவில் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்கு வரும் மின் இணைப்பு பழுதடைந்ததால் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் முருகன் (வயது 35) என்பவர் மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்குவதற்கு முயன்றார். அப்போது கம்பத்தின் பாதி சென்றவுடன் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது.
இதில் கீழே குதித்து முருகன் தப்பினார். அருகில் இருந்த பழுதடைந்த மின் கம்பங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மின் வயிர்களுடன் சாய்ந்து விழுந்தன.
மின்சாரம் துண்டிப்பு
இதைபார்த்து அப்பகுதியில் சாலையில் நடந்து கொண்டிருந்த பொதுமக்கள் தங்கள் மீது மின்சாரம் பாய்ந்து விடுமோ? என்று அலறியடித்து அப்பகுதியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் பெரும் மின் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பேரூராட்சி பகுதியில் உள்ள மின்கம்பங்கள் பல வருடங்களுக்கு முன்பு நடப்பட்டது.
இவைகள் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை மின் வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்ற ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றி புதிதாக மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.