ராமேசுவரம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு

கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Update: 2023-04-14 18:45 GMT

ராமேசுவரம், 

கோடைகால வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மின்வெட்டு

தமிழக முழுவதும் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே மாலை 6 மணியிலிருந்து இரவு வரையிலும் பலமுறை மின்வெட்டு ஏற்பட்டு வருகின்றது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் மின்வெட்டால் வீடுகளில் வெப்பம் தாங்க முடியாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

உடனடி நடவடிக்கை

இது பற்றி மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது 3 நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. பெரும்பாலான தங்கும் விடுதிகளில் ஏ.சி., மின்விளக்கு, பேன் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் ராமேசுவரம் மின் சப்ளையிலிருந்து தேவையான அளவு மின்சாரம் கொடுக்க முடியவில்லை. மின்சாரம் சப்ளை நிற்காமல் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

ஓரிரு விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தினால்கூட இது போன்ற மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் கோடைகால விடுமுறை நாட்களில் தினமும் இதே நிலை இருக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து மாவட்ட கலெக்டர், மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ராமேசுவரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்