விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜபாளையம்,
தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசைத்தறிகள்
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் 600 விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தறிகளை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப்பகுதி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கூலி உயர்வு சம்பந்தமாக தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறாததால் பத்திரகாளியம்மன் விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
போராட்டம்
எனவே விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளை கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் சி.ஐ.டி.யு, தொழிற்சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முகவூர் முத்துசாமிபுரம் நெசவாளர் பகுதியில் இருந்து பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, தளவாய்புரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு கூலி உயர்வு கோரியும், விடுமுறை ஊதியத்தை உயர்த்தவும், பேச்சு வார்த்தைக்கு வராத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.