தாரமங்கலம்:-
மது குடிக்க 100 ரூபாய் தராத ஆத்திரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு தீ வைத்த விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பழைய இரும்பு கடையில் தீ
சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி 22-வது வார்டு கட்டயமுதலி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் சங்ககிரி மெயின் ரோடு பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இரும்பு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழைய மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது.
இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பழைய இரும்பு கடை அருேக உள்ள ஒரு தனியார் பள்ளியின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இரவு 11 மணி அளவில் ஒருவர் இரும்பு கடையின் பின்பக்க வழியாக வந்து கடைக்கு தீ வைத்து சென்றது தெரியவந்தது.
விசைத்தறி தொழிலாளி கைது
கண்காணிப்பு கேமராவில் இருந்த உருவத்தை வைத்து போலீசார் தேடிவந்த நிலையில், தாரமங்கலம் அருகே உள்ள கீழ் சின்னா கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி குமார் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்ததில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததும், 11-ந் தேதி இரவு குடிப்பதற்கு ரூ.100 கேட்டு, அங்கிருந்த ஒரு தாபா ஓட்டல் உரிமையாளரிடமும், இரும்பு கடை உரிமையாளர் செல்வராஜிடமும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் யாரும் பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தான் இரும்பு கடைக்கு தீ வைத்ததாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். மது குடிக்க 100 ரூபாய் கேட்டு தர மறுத்ததால் ரூ.10 லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் மோட்டார் பொருட்களுக்கு தீ வைத்து எரித்து சேதப்படுத்திய விசைத்தறி தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.