ெரயில் என்ஜினில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம்

இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, ரெயில் என்ஜினில் ஏறிய வாலிபர் மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-11 17:59 GMT

பரமக்குடி, 

இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, ரெயில் என்ஜினில் ஏறிய வாலிபர் மீது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

ரெயிலில் பயணித்த இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புறப்பட்டனர். அவர்கள், திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்ற ெரயிலில் ஏறி பரமக்குடி வந்தனர்.

பரமக்குடி ெரயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கிய தேவகோட்டை அருகே பனிப்புலான்வயல் பகுதியை சேர்ந்த முகேஷ் (வயது 18) என்பவர் திடீரென ரெயில் என்ஜினின் முன்பகுதியில் ஏறினார். பின்னர் அவர் கையில் வைத்திருந்த கொடியை தூக்கிப்பிடித்து கோஷம் எழுப்பினார்.

மின்சாரம் தாக்கி படுகாயம்

அப்போது முகேசின் கையில் இருந்த கொடியின் இரும்பு கம்பியானது, ரெயிலுக்கான உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் கம்பி வழியாக முகேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அவருடன் வந்திருந்தவர்கள் அலறினர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முகேசை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்