கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

நாகர்கோவிலில் பழங்கள் கொடுக்காத ஆத்திரத்தில் கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-29 21:46 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பழங்கள் கொடுக்காத ஆத்திரத்தில் கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பழக்கடைக்காரர்

ஈத்தாமொழி அருகே உள்ள வடக்கு சூரங்குடி தட்டான்விளையை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். அப்போது கடைக்கு வந்த 2 வாலிபர்கள் பிரேம் ஆனந்திடம் பழங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு பிரேம் ஆனந்த் பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்போது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பெட்ரோல் ஊற்றி தீவைப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், பிரேம் ஆனந்திடம் தகராறில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகள் பேசி கல்லால் தாக்கினர். மேலும் ஆத்திரம் தீராத அந்த வாலிபர்களில் ஒருவர் திடீரென தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றினார். மற்றொரு வாலிபர் கையில் வைத்திருந்த தீப்பெட்டி குச்சியில் தீயை பற்ற வைத்து பிரேம் ஆனந்த் மீது போட்டார்.

இதனால் பிரேம் ஆனந்த் உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அவர் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பிரேம்ஆனந்த் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தீ வைத்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பிரேம் ஆனந்திடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர்கள் பற்றிய விவரங்கள் முதலில் தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் பிரேம் ஆனந்த் கூறிய தகவல் மற்றும் கண்காணிப்பு கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரேம் ஆனந்த் மீது தீ வைத்தது புன்னைநகர் ஹோலிகிராஸ் ரோட்டை சேர்ந்த நவீன்குமார் மற்றும் தட்டான்விளையை சேர்ந்த சஞ்சய் என்பது தெரியவந்தது.

தனிப்படை

ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்ததும் 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். எனவே 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரேம் ஆனந்த் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பழக்கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்