கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொல்லமுயன்ற மனைவி
புதுக்கோட்டையில் கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயன்ற மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொலை செய்ய முயன்ற மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர்
தூத்துக்குடி அருகே உள்ள நடுகூட்டுடன்காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது 32). தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (27). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுடலையின் உறவினர் குழந்தைகளையும், தாயையும், சுடலை பராமரித்து பண உதவி செய்து வந்தாராம். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்து உள்ளது.
வெந்நீர்
சம்பவத்தன்றும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு சுடலை வீட்டில் தூங்கி கொண்டு இருந்தாராம். அப்போது, மகாலட்சுமி ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வெந்நீரை கொண்டு வந்து சுடலை மீது ஊற்றினாராம். இதில் பலத்த காயம் அடைந்த சுடலை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் மகாலட்சுமி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுடலை தாக்கியதில் காயம் அடைந்ததாக மகாலட்சுமியும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது புகாரின் பேரில் சுடலை மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.