அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கோழிப்பண்ணை குத்தகைதாரர் கைது
பழனியில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கோழிப்பண்ணை குத்தகைதாரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயக்குமார் (வயது 55). இவர், பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ரேவதி. இந்த தம்பதியின் மகள், சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க சென்னைக்கு ரேவதி சென்றுவிட்டார். இதனால் வீட்டில் உதயக்குமார் மட்டும் தனியாக இருந்தார். கடந்த 14-ந்தேதி தனது வீட்டில் உதயக்குமார் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அவரது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே புகுந்தனர். பின்னர் உதயக்குமாரை கத்தியால் குத்தியதுடன் அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா
துணிகர கொள்ளை சம்பவம் குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் திருட்டு நடந்த பகுதிகளில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பழனி பெரியகடைவீதி பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (வயது 41) மற்றும் அவரது கூட்டாளிகளின் உருவங்கள் பதிவாகி இருந்தது.
சரவணக்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து டாக்டர் உதயக்குமார் வீட்டில் கொள்ளையடித்ததை கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்தது. இதனையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பழனியை அடுத்த அமரபூண்டி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் சரவணக்குமார் பதுங்கி இருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது.
ரூ.19 லட்சம் பொருட்கள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணக்குமாரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 34 பவுன் தங்க கட்டி, வெள்ளி குத்துவிளக்கு, தட்டு என சுமார் 5 கிலோ வெள்ளி பொருட்கள், தங்க பொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம் (எலக்ட்ரிக் பர்னஸ்) மற்றும் கார், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.19 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.