பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் புகாா் பெட்டி பகுதி
குறைகளை தொிவிக்கும் பகுதி
சாலை சீரமைக்கப்படுமா?
புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பவானிசாகர் சாலையில் இருந்து எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் மழை காலங்களில் ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
வீணாகும் குடிநீர்
ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 அடி ரோட்டில் குழாய் உடைந்து ரோட்டில் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. வாகனங்கள் போகும்போது அந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மீது தண்ணீர் படுகிறது. மேலும் கோடை காலம் என்பதால் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. எனவே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, ஈரோடு.
ஆஸ்பத்திரி புதுப்பிக்கப்படுமா?
கெம்பநாயக்கன்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. ஆஸ்பத்திரி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுவதில்லை. ஆஸ்பத்திரியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. விஷ பூச்சிகள் தொந்தரவும் இருக்கிறது. எனவே இந்த ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதுடன், அதை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கெம்பநாயக்கன்பாளையம்.
தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை அபாயகரமான வளைவுகளை கொண்டு உள்ளது. இதில் ஒந்தனை கால் பதை அருகே உள்ள வளைவில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வளைவில் திரும்பிய மோட்டார்சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி உடைந்த தடுப்பு சுவர் பகுதி வழியாக மலையில் உருண்டு விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக மோட்டார்சைக்கிளில் வந்தவர் உயிர் தப்பினார். எனவே மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுக்க அந்த வளைவில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பர்கூர்.
பகலில் எரியும் மின்விளக்கு
கோபியில் தினசரி மார்க்கெட் அருகில் பழைய ஆஸ்பத்திரி வீதி செல்கிறது. அந்த வீதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள ஒரு மின்விளக்கு பகல் நேரத்திலும் எரிகிறது. இதனால் தேவையில்லாமல் மின் விரயம் ஏற்படுகிறது. எனவே பகலில் தேவையில்லாமல் எரிந்துகொண்டிருக்கும் அந்த மின்விளக்கை அணைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குடிநீர் குழாயில் உடைப்பு
ஈரோடு திண்டல்மேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்கிறது. இந்த தண்ணீர் பெருந்துறை ரோடு முழுவதும் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அந்தப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. எனவே உடைந்த குடிநீ்ர் குழாயை சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பத், ஈரோடு.
பாராட்டு
சென்னசமுத்திரம் பேரூராட்சி 1-வது வார்டுக்கு உள்பட்ட கொல்லம்புதுப்பாளையம் பகுதியில் மின் கம்பம் பழுதடைந்து காணப்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் கொல்லம்புதுப்பாளையம் பகுதிக்கு வந்து பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய நிர்வாகத்துக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்
பொதுமக்கள், கொல்லம்புதுப்பாளையம்.