மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

மழைக்கால நிவாரணம் வழங்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-03-15 17:47 GMT

வீட்டுமனை பட்டா

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் ஜெயங்கொண்டத்தில் உள்ள கீழ அருந்ததியர் தெருவை சேர்ந்த மக்கள் வந்து கொடுத்த மனுவில், கீழஅருந்ததியர் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் இட நெருக்கடியில் வாடகை வீட்டிலும் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள்

மண்பாண்ட தொழிலாளர்கள் அளித்த மனுவில், சோழமாதேவி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய தொழிலே மண்பாண்ட தொழில்தான். இந்நிலையில் ஆண்டுதோறும் பருவ மழையால் பாதிக்கக்கூடிய மண்பாண்ட தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.5,000 நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான நிவாரண நிதி இதுவரை வழங்கவில்லை. இதனால் நங்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதேபோல் கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள வீடு இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு பொய்யூர் சாலையில் இலவச வீட்டுமனை கடந்த 2012-ம் ஆண்டு அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இலவச வீட்டு மனைக்கான தனிநபர் பட்டா பயனாளிகளுக்கு வழங்கியுள்ள நிலையில் இடத்தை அளந்து காட்ட வேண்டும் என 11 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இலவச வீட்டு மனை வழங்கியது சம்பந்தமாக தனிநபர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாவட்ட நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் இனியும் தாமதப்படுத்தாமல் இலவச வீட்டுமனையை அளந்து கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்