புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்துள்ள மண்பாண்டங்கள்

அன்னவாசல் பகுதியில் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு வந்துள்ள மண்பாண்ட பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Update: 2022-11-01 18:41 GMT

மண்பாண்டங்கள் விற்பனை

தமிழகத்தில் பெண்கள் வீடுகளில் சமைப்பதற்கு பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் போன்றவற்றினால் ஆன பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த பாத்திரங்கள் வரவுக்குப்பின் மண்பாண்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து மறைந்தது. மண்பாண்டங்களில் சமைக்கும் உணவு உடலுக்கு ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வு சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பயன்பாட்டிற்கு வசதியாக பல்வேறு வடிவங்களில் தற்போது வாகனங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்து மண்பாண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

தோசைக்கல் ரூ.50

இலுப்பூர், அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி பகுதிகளில் அஜ்மீரில் இருந்து ஒரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கைப்பிடியுடன் மண் வடைச்சட்டி, மூடியுடன் கூடிய மீன்குழம்பு சட்டி, தோசைக்கல் ஆகியவை தற்போது விற்பனை செய்யப்படுகிறது. தோசைக்கல் ரூ.50-க்கும், மூடியுடன் கூடிய குழம்புசட்டி ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

அதிக அளவு விற்பனை

இதுகுறித்து வியாபாரி கூறியதாவது:- அஜ்மீரில் இருந்து வாகனம் மூலம் கைப்பிடியுடன் மண் வடைச்சட்டி, மூடியுடன் கூடிய மீன்குழம்பு சட்டி, தோசைக்கல் ஆகியவை தற்போது விற்பனை செய்து வருகிறோம். தோசைக்கல் ரூ.50-க்கு விற்பனை செய்கிறோம். இது பல்வேறு பகுதிகளில் அதிக அளவு விற்பனை ஆகிறது என்றார்.

தனிசுவை உண்டு

இதுகுறித்து தோசைக்கல் வாங்கிய ஒருவர் கூறுகையில், மண் சட்டியில் செய்யப்படும் உணவு பொருட்களுக்கு தனி சுவை உண்டு. இப்போது மண் சட்டிகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் தற்போது வீடுதேடி ரூ.50-க்கு கைப்பிடியுடன் தோசைக்கல் கிடைக்கிறது. ரூ.50-க்கு விற்கப்படும் இந்த தோசைக்கல் மண்ணால் செய்யப்பட்டது அல்ல. சிமெண்டு கல், இதன் மேலே மண் பூசப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்