பயணிகள் கப்பல் போக்குவரத்து
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நாகை-இலங்கை இடையே நேற்று முன்தினம் பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினர்.
மேலும் சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பல்வேறு கட்ட சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர். இதேபோல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயணம் செய்ய வருவதற்காக சோதனைச்சாவடி, புக்கிங் சென்டர் உள்ளிட்டவைகளும் தயார் நிலையில் உள்ளது.
ஒத்தி வைப்பு
150 பேர் பயணம் செய்யும் இந்தக் கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இன்று முதல்(செவ்வாய்க்கிழமை) பயணிகளுடன் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது பயணிகள் மற்றும் நாகை பொதுமக்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
12-ந்தேதி முதல் இயக்கம்
இதுகுறித்து நாகை துறைமுக அலுவலர் கேப்டன் மானஷயா நேற்று மாலை நிருபர்களிடம் கூறும்போது, நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நாளை(அதாவது இன்று) தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 12-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
இதனை மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனாவால் தொடங்கி வைக்க உள்ளார். டிக்கெட் முன்பதிவு செய்த அனைவருக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.