உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

கிளிக்குடி பஸ் நிலையம் அருகே நடத்தப்படுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-06-11 17:50 GMT

அன்னவாசல்:

கிளிக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் மீதும், நெடுஞ்சாலை ஓரமாக உள்ள காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்ற கோரியும், பாதுகாப்பற்ற கிணற்றை மூடக்கோரியும் கிளிக்குடி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் இதுகுறித்து எந்தவிதமாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிளிக்குடி பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று இலுப்பூர் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கிளிக்குடி பொதுமக்களிடம் தாசில்தார் முத்துக்கருப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். கிளிக்குடியில் கிணற்றின் அருகில் தடுப்பு அமைக்கவும், சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனமான கிராம சேவா சங்கத்தில் உள்ள முறைகேடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறைகள் தொடர்புடையது என்பதால், மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு செய்து, நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், கிராம சேவை சங்கம் முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவினை நபார்டு பொது மேலாளர், உதவி இயக்குனர் (வேளாண்மை) ஆகியோருக்கு பரிந்துரை செய்யுமாறு கிளிக்குடி பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மனுவினை சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டது. எனவே, நாளை காலை 10 மணியளவில் கிளிக்குடி பஸ் நிலையம் அருகே நடத்தப்படுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்