கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்
கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வில் தற்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது. ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், இரட்டை தலைமைதான் நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் கூறி வருகிறார்கள். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள். இதனால் இருதரப்பினரிடையே உள்ள கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில் கோவையில் உள்ள உக்கடம், ரேஸ்கோர்ஸ், ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால், பெரியகடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த போஸ்டரில் எவர் கிரீன் பவர்புல் ஸ்டார் என்று ஆங்கிலத்திலும், கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா என்ற வாசகங்களும் இடம்பெற்று உள்ளது. கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.