பொருநை நெல்லை புத்தக திருவிழா

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பொருநை நெல்லை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

Update: 2023-02-22 20:00 GMT

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பொருநை நெல்லை 6-வது புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. இதற்கான உருவ சின்னமான ஆதினி என்ற பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்னத்தை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டு, புத்தக பாலம் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை 6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா நடத்தப்பட உள்ளது. முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இதில், நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறை நூலகம், அரசு பள்ளிக்கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் புத்தகப்பாலம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்புபவர்கள் https://nellaibookfair.in என்ற இணையதள முகவரியின் மூலம் அடுத்த மாதம் 7-ந்தேதி மாலை 5 மணி வரை நன்கொடை வழங்கலாம்.

புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாண்டி என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அறிஞர்களின் கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை நெல்லை மாவட்டத்தின் யூடியூப் பக்கத்தில் காணலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மூர்த்தி, போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்