சிதறு தேங்காய் உடைப்பு போராட்டம்

Update: 2023-07-29 17:14 GMT


கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வருகிற 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தொடர் சிதறு தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் உடைக்கும் தொடர் போராட்டம்

திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி சார்பில் ஆலோசனைக்கூட்டம் நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயல் தலைவர் வெற்றி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் கள்ளுக்கு தடையை நீக்கி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். எந்தவித நிபந்தனையும் இன்றி விவசாயிகளிடம் கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிற வகையில், வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிதறு தேங்காய் உடைக்கும் தொடர் போராட்டம் நடத்துவது.

தலைமை செயலகம் முன்பு

பொங்கலூர் ஒன்றியம் புத்தரச்சல் ஈஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்தி பசு நிலையத்தில் 1-ந் தேதி சிதறு தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்தப்படும். தொடர்ச்சியாக 30-ந் தேதி வரை கிராமங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சி போன்ற இடங்களில் நடத்துவது. 31-ந் தேதி அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தி பஸ் நிலையம் முன் சிதறு தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு அதன்பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளையும் திரட்டி சென்னை தலைமை செயலகம் முன்பு சிதறு தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்