100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

Update: 2023-07-22 14:23 GMT


மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பேரூராட்சியில் 100 நாள் வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் வாழ்வாதாரம்

கிராமப்புறங்களில் வேலையில்லாமல் தவிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் கிராம ஊராட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் நீர் நிலைகள் தூர் வருதல், கால்வாய்கள் சீரமைப்பு மற்றும் விவசாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பேரூராட்சிப்பகுதிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

மாவட்டத்துக்கு ஒரு பேரூராட்சி

ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.முதல் கட்டமாக மாவட்டத்துக்கு ஒரு பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் குமரலிங்கம் பேரூராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படாததுடன், புதிதாக அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் அட்டை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குமரலிங்கம் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மாசாணம், சி.பி.எம். தாலுகா செயலாளர் வடிவேல், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், மாதர் சங்க மாவட்டக்குழு ராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.இதனைத் தொடர்ந்து உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்