அம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு

பூதப்பாண்டியில், கோவில் பூஜை பொருட்களை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-09-09 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டியில், கோவில் பூஜை பொருட்களை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

முத்தாரம்மன் கோவிலில் திருட்டு

பூதப்பாண்டி பஸ் நிலையம் அருகே தேவி முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மாலை பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலையில் கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உடனே கோவில் பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பூஜை பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவிலில் பொருட்களை திருடியது யார்? என விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

தொழிலாளி கைது

அப்போது துவரங்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் சாக்கு பையுடன் நின்று கொண்டிருப்பதாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் வந்தது. உடனே நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரிடம் சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த சாக்கு பையில் கோவிலில் திருடப்பட்ட பூஜை பொருட்கள் இருந்தது. உடனே அந்த நபரை பிடித்து பூதப்பாண்டி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் அழகியபாண்டியபுரம் எட்டாமடை மேல பிளவக்கல்விளை பகுதியை சேர்ந்த தொழிலாளியான தர்மர் (வயது 49) என்பதும், கோவிலில் பூஜை பொருட்களை திருடி கடைகளில் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து தர்மரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்