அம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் திருட்டு
இடலாக்குடி அருகே அம்மன் கோவிலில் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கருவறை கதவை உடைக்க முடியாததால் அம்மன் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் தப்பின.
மேலகிருஷ்ணன்புதூர்:
இடலாக்குடி அருகே அம்மன் கோவிலில் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கருவறை கதவை உடைக்க முடியாததால் அம்மன் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் தப்பின.
அம்மன் கோவில்
நாகர்கோவில் இடலாக்குடி அருகே குளத்தூரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகேயன் என்ற கார்த்திக் (வயது31) பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் நடையை பூட்டி விட்டு சென்றார்.
நேற்று காலையில் பூசாரி வந்த போது கோவில் வளாகத்தில் இருந்த 2 குத்துவிளக்குகள், பித்தளை வாளி, உருளி, பஞ்ச பாத்திரம், 3 மணிகள், 3 தட்டுகள் போன்ற பூஜை பொருட்களை காணவில்லை. மேலும் கோவில் கருவறை கதவு சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
நகைகள் தப்பின
தொடர்ந்து குளத்தூர் ஊர் செயலாளர் பாலசுப்ரமணியம் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இரவில் யாரோ மர்ம நபர்கள் கோவில் வளாகத்தில் புகுந்து கருவறை கதவை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதனால் கோவில் வளாகத்தில் இருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
கருவறை கதவை உடைக்க முடியாததால் அம்மன் அணிந்திருந்த 10 பவுனுக்கு மேற்பட்ட நகைகள், விலை உயர்ந்த பாத்திரங்கள் போன்றவை தப்பின.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.