பொங்கல் பரிசுத்தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.

Update: 2024-01-09 11:08 GMT

சென்னை, 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன் மூலம் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கவுள்ளார், என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்