தூத்துக்குடியில்பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்:கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
தூத்துக்குடியில்பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகத்தை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களும் எந்தெந்த தேதியில் பொருட்களை வாங்க வர வேண்டும் என்று குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி கடந்த 3-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 967 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 5 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன்கார்டு தாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
ஆய்வு
இந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் எம்.சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறதா? என்று பார்வையிட்டார்.
அதே நேரத்தில் கலெக்டரும் வீடுகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து பரிசு தொகுப்புக்கான டோக்கனை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுகாசிம் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.