பொங்கல் பரிசு தொகுப்பு 13-ந் தேதி வரை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13-ந் தேதி வரை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சென்னை,
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
விடுபட்டவர்களுக்கு 13-ந் தேதி வழங்கப்படும்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வருகிற 9-ந் தேதி தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளில் எவ்வளவு ரேஷன் கார்டுகள் இருக்கிறது என்பதை பொறுத்து, ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பை 12-ந் தேதிக்குள் பெற முடியாதவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
ஒரு கரும்பு விலை ரூ.33
பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் 60 சதவீதம் அளவிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது. இன்னும் 2, 3 தினங்களில் 100 சதவீத பொருட்களும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பொங்கலுக்கு கரும்பு வினியோகம் செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த பன்னீர் கரும்புக்கு விலை கிடைக்காது. எனவே அதனை அரசாங்கம் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பரிசீலனை செய்து, 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ் தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் கரும்பு வழங்குவதற்கும் உத்தரவு வழங்கப்பட்டு அது செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. அந்த 17 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒரு கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கரும்பை இடைத்தரகர்கள் இன்றி கலெக்டர் தலைமையிலான குழுக்களே நேரடியாக கொள்முதல் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வே.ராஜாராமன், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் சு.பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.