அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

வேலூர் தொரப்பாடி ரேஷன்கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-09 17:29 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கம், முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினர். அதில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன. வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 584 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வேலூர் தொரப்பாடியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொறுப்பு) நந்தகுமார். உதவி கலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பை பெண் பயனாளிக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், பொங்கல் பரிசு தொகுப்பை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் வழங்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து மற்ற ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேலூர் தாசில்தார் செந்தில், வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பூமா, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சரவணமூர்த்தி, 4-வது மண்டலக்குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கைரேகை பதிவு கருவி பழுது

வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பணி நேற்று தொடங்கியது. பரிசு தொகுப்பு கொடுக்க தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ள கைரேகை பதிவு செய்யக்கூடிய கருவி திடீரென பழுதானது. அதனால் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக கைரேகை பதிவு செய்யும் கருவிகள் இயங்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் சிறிது நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து பயனாளிகளிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட்டன. பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணியை வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்