தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பொங்கல் பண்டிகை டிக்கெட் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்தன
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பொங்கல் பண்டிகையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் விற்று முடிந்தன.
சென்னை,
பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெளியூரில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தோடு கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் பண்டிகை காலங்களில் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும் ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு, பண்டிகையை முன்னிட்டு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10-ந் தேதிக்கான ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஜனவரி 12-ந் தேதி மற்றும் ஜனவரி 13-ந் தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள், நேற்று முன்தினம் தொடங்கி 10 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.
தென்மாவட்ட ரெயில்கள்
குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-100), அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-345), திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-158), நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-130), நெல்லை எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-111), குருவாயூர் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-34), முத்துநகர் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-134), கொல்லம் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-232), பாண்டியன் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-151), பொதிகை எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-146), வைகை எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-55), மதுரை எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-107) ஆகியவற்றில் முன்பதிவின் மூலம் டிக்கெட்டுகள் உடனடியாக விற்று முடிந்தன. தேஜஸ் எக்ஸ்பிரஸ்சில் மட்டும் 769 டிக்கெட்டுகள் மீதம் இருந்தன.
டிக்கெட்டுகள் மீதம்
இதேபோல் சேரன் எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-61), நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (காத்திருப்பு-46), ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (காத்திருப்பு-35), ரப்திசாகர் (காத்திருப்பு-24) ஆகியவற்றிலும் டிக்கெட்டுகள் மளமளவென விற்று தீர்ந்தன. மேலும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மீதம்-807), கோவை எக்ஸ்பிரஸ் (மீதம்-896), சதாப்தி எக்ஸ்பிரஸ் (மீதம்-320), வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (மீதம் 116) போன்ற எக்ஸ்பிரஸ்களில் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருப்பதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் நேற்று ஜனவரி 14-ந் தேதிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் போன்றவற்றில் டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. இதர முக்கியமான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்காமல் மீதம் இருந்தன.