கரூரில் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை
கரூரில் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்து இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பரிசு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்து புதுப்பானையிலிட்டு புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் நாளே பொங்கல் திருநாளாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.
அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண்பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. களைகட்டி வரும் பொங்கல் பண்டிகையை குறித்து இல்லத்தரசிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
விறகு அடுப்பில் சமைத்தது இல்லை
குளித்தலை என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த இல்லத்தரசி சந்திரகலா:-
மண்பானையில் சமையல் செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. நான் திருமணத்திற்கு முன்னர் சமையல் செய்ய கற்றுக் கொண்ட போதில் இருந்தே, விறகு அடுப்பில் சமைத்தது இல்லை. கியாஸ் அடுப்பிலேயே அனைத்து சமையலும் செய்ய கற்றுக் கொண்டேன். இதன் காரணத்தால் நான் திருமணம் ஆன பின்னரும் தினசரி மட்டுமல்லாது பொங்கல் பண்டிகை அன்றும் கியாஸ் அடுப்பிலேயே பொங்கல் வைத்து வருகிறேன். ஆனால் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது மட்டும் அங்கு கல் அடுப்பில் பானை வைத்து விறகு பற்ற வைத்து பொங்கல் சமைத்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவோம்.
மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம்
நொய்யல் அருகே முத்தனூர் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ஜோதி:-
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று நாங்கள் மண்பானையில் தான் பொங்கல் வைத்து வருகிறோம். அதேபோல் வாசல் பகுதியில் 3 கற்களை அடுப்பு போல் வைத்து அதில் விறகு வைத்து மண்பானை மூலம் பொங்கல் வைக்கிறோம். அதேபோல கிராமப் பகுதிகளில் உள்ளவர்களும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் என இருபொங்கலையும் செய்கிறார்கள். நகர்ப்புறத்தில் மட்டுமே கியாஸ் அடுப்பில் சில்வர் பாத்திரத்தை வைத்து பொங்கல் வைக்கிறார்கள். கிராமப் பகுதிகளில் அது போன்று செய்வது இல்லை. பரம்பரை பரம்பரையாக கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் மண்பானையில் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
திரைப்படத்தை பார்த்தால் முழு நிறைவு
சின்னதாராபுரம் அருகே உள்ள கரைப்பசுபதிபாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி ராஜேஸ்வரி:-
தமிழர் திருநாள் தைப்பொங்கல் மிகவும் சிறப்பான ஒரு நாள். அன்றைய தினம் காலையில் பொங்கல் வைத்து சாப்பிட்டவுடன், நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது, நண்பர்களுடன் சென்று புதியதாக வெளி வந்திருக்கும் திரைப்படங்களை அன்றைய தினமே பார்த்து மகிழ்வது இதுபோன்றே இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள். அப்போது தான் பொங்கல் தினம் முழு நிறைவு பெற்றதாக மகிழ்ச்சி அடைகிறார்கள். மற்ற தினங்களில் வரும் விடுமுறைகள், விழா காலங்களை விட பொங்கல் விடுமுறை 2, 3 நாட்கள் இருப்பதால் இந்த இளைஞர்கள் வெளியில் சென்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்த செல்பி
தோகைமலை அருகே உள்ள தெலுங்குப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி கோமதி:-
தற்போது உள்ள இளம்பெண்கள், வாலிபர்கள் தங்களது குடும்பத்துடன் சேர்ந்து காலையில் வீட்டின் முன்பு மண்பானையில் பொங்கல் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். சிலர் நானும் எங்கள் வீட்டில் பொங்கல் வைத்து விட்டேன் என மற்ற நண்பர்களுக்கு தெரியப் படுத்துவதற்காக செல்போன் மூலம் பொங்கல் பானை அருகே நின்று கொண்டு செல்பி எடுத்து வாட்ஸ்-அப் உள்பட அனைத்தும் வலைத்தள பக்கங்களில் பதிவிடுகிறார்கள். தற்போது செல்பி எடுப்பது என்பது பிரபலமாகி விட்டது. இந்த செல்பி என்பது சில சமயங்களில் பெண்களுக்கு நன்மையும் பயக்கும், சில சமயம் தீைமயும் விளைவிக்கும். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஆர்வமாக இருக்கிறோம்
வெள்ளியணையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஜெஷி:-
தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை என்பது சிறு வயதில் இருந்தே நான் அறிந்த ஒன்று. பொங்கல் பண்டிகை என்றால் வீடே களைகட்டிவிடும். வெளியூரில் இருக்கும் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் ஊருக்கு வந்து விடுவர். அவர்களை சந்தித்து அவர்களுடன் விளையாடி மகிழ்ந்து ஒவ்வொருவரின் வீட்டிலும் பொங்கல் உண்டு மகிழ்வோம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட என் போன்ற பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். உழவு தொழிலை செய்ய உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும் இந்த நாளில் பொங்கல் இட்டு மகிழ்கிவோம். பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றவையே ஆகும். உழவு தொழிலை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் அன்று தமிழர்களின் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது நமது கடமை ஆகும். அந்த வகையில் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்கவும் அத்தொழில் அழியாமல் இருக்கவும் ஒவ்வொருவரும் பொங்கலிட மண்பாண்டத்தை பயன்படுத்த வேண்டும்.
விற்பனை மந்தம்
கரூர் ஜவகர் பஜாரில் பொங்கல் மண்பானை விற்கும் வியாபாரி முருகதாஸ்:-
கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், ஜவகர் பஜார், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. மண்பானைகள் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமம் மற்றும் நகரில் உள்ள பெரும்பான்மையான வீடுகளில் மண்பானையை கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். தற்போது அந்த அளவுக்கு மண்பானையில் பொங்கல் வைப்பதை தவிர்த்து பித்தளை, சில்வர் உள்ளிட்ட பானைகளில் பொங்கலை வைத்து வழிபடுகின்றனர். இருப்பினும் மண்பானை விற்பனை இந்தாண்டு மந்தமாக நடைபெற்று கொண்டு உள்ளது. பாரம்பரியமாக தமிழர்கள் பயன்படுத்தி வரும் மண்பானை பொங்கலுக்கு எப்பொழுதும் சிறப்பு உண்டு.
இவ்வாறு அவர்கள் கூறினார்.