புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பொங்கல் திருவிழா
புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பங்குதந்தை பெலிக்ஸ் சாமிவேல் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தங்களின் வளர்ப்பு கால்நடைகள், ஆடு, மாடுகள், விவசாயம் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தும் மாட்டுவண்டிகள், டிராக்டர்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முன்புறம் நிறுத்தியிருந்தனர். பங்குத்தந்தை கால்நடைகள் மற்றும் மாட்டுவண்டிகளை மந்திரித்து புனிதப்படுத்தினார். ஆலயத்தின் சார்பில் சர்க்கரை பொங்கல் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதேபோல் தென்னூர் கிராமத்திலும் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை மரிய நல்லூர் ராஜா, கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்கு தந்தை மரியதாஸ், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ஐஆல்பர்ட், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயத்தில் பங்குதந்தை ஜஸ்டின்பிரதாப், கீழநெடுவாய் புனித அன்னாள் ஆலயத்தில் பங்குதந்தை ஆல்பர்ட் புஷ்பராஜ், நெட்லகுறிச்சி புனித சவேரியார் ஆலயத்தில் இமானுவேல் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று கால்நடைகளை புனிதப்படுத்தினர்.