பொங்கல் பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன.

Update: 2024-01-02 06:21 GMT

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 14-ம் தேதி போகி பண்டிகை தொடங்கி,15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அந்தவகையில், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் சென்னையில் இருந்து வெளியூர் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பேருந்துகளை இணைத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்