இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்: சென்னை கடற்கரை, சுற்றுலாத்தலங்களில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களில் 15 ஆயிரம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Update: 2023-01-16 22:59 GMT

சென்னை,

காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர். எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந் தேதி (இன்று) பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்பட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவார்கள்.

எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரைகள், இணை கமிஷனர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

போலீசாருக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

போலீஸ் உதவி மையங்கள்

மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும், மோட்டார் படகுகள் மற்றும் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளித்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

கடலில் குளிக்க தடை

காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பார்கள். மேலும் குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், முதியோர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆண்டு மெரினா கடற்கரை மணற்பரப்பில் திறக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்காற்றும்.

கடற்கரையையொட்டிய பகுதிகளில் தமிழ்நாடு போலீஸ்துறை கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள 11 உதவி மையங்களிலும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் குழந்தை, பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதி குழந்தைகள் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம், குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும் அதிக திறன் கொண்ட 2 பெரிய டிரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகன சோதனை

போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீசாரின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்