டிரோன் மூலம் மருந்து தெளித்து ஆகாயத்தாமரை செடிகளை அழிக்கும் பணி

முத்துப்பேட்டை அருகே குன்னலூரில் டிரோன் மூலம் மருந்து தெளித்து வாய்க்காலில் படர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அழிக்கும் பணி தொடங்கியது.

Update: 2022-09-27 18:45 GMT

ஆலத்தம்பாடி;

முத்துப்பேட்டை அருகே குன்னலூரில் டிரோன் மூலம் மருந்து தெளித்து வாய்க்காலில் படர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அழிக்கும் பணி தொடங்கியது.

வடிகால்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் உள்ள மாரியாறு வடிகால், பாண்டி கோட்டகம் ராஜன் வாய்க்காலில் இருந்து பிரிந்து வடிகாலாக உருவாகி இங்கிருந்து கரையாங்காடு வழியாக தொண்டியக்காடு சென்று கடலில் கலக்கிறது. இதைப்போல இப்பகுதியில் உள்ள கள்ளிக்குடி வடிகால், பாண்டியான் போக்கு வடிகால், வளவனாறு வடிகால் என 4 வடிகால்களும் குன்னலூர், எக்கல், தர்காசு போன்ற சுற்று பகுதியில் உள்ள சுமார் 125 கிராமங்களுக்கு வடிகாலாக உள்ளது.

ஆகாயத்தாமரை செடிகள்

இதனால் கடும் மழை மற்றும் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நேரத்தில் இந்த வடிகால்கள் இப்பகுதி கிராமங்களுக்கு பயனாக இருந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வடிகால்களை தூர் வராததால் தற்போது இதில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளது. இதனால் அதிகளவில் தண்ணீர் வரத்து உள்ள நிலையில் தண்ணீர் வடிய முடியாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லாமல் போகும் நிலை உள்ளது.

இதனால் இந்த வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதுடன் வரும் ஆண்டில் வடிகாலை தூர் வாரியும் தரவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் குன்னலூர் ஊராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் அனிதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

டிரோன் மூலம்....

இதில் ஊராட்சி செலவில் இந்த வாய்க்கால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளில் டிரோன் மூலம் மருந்து தெளித்து அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி திண்டிவனம் பகுதிலிருந்து டிரோன் கொண்டு வரப்பட்டு அதில் உள்ள டேங்கில் களைக்கொல்லி மருந்துகளை நிரப்பி மருந்து ஆகாயதாமரை செடிகளில் தெளிக்கும் பணிகள் முதல் கட்டமாக மாரியாறு வடிகாலில் தொடங்கியது. இதற்காக டிரோனில் உள்ள கொள்கலனில் மருந்து நிரப்பப்பட்டது. பின்னர் ஒருவர் ரிமோட் மூலம் டிேரானை இயக்க டிரோன் பறந்து சென்று ஆகாயத்தாமரை செடிகள் மீது மருந்தை தெளித்தது.

ஓவ்வொரு வாய்காலிலும் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை 15 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால் சுமார் 3 முதல் 4 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஆகாயத்தாமரை செடிகள் மீது டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியை கிராம மக்கள் வேடிக்கையுடன் பார்த்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் இந்த செயல்பாடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்