பழனி இடும்பன்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி; ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது
பழனியில் ஆர்.டி.ஓ. தலைமையில் இடும்பன்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
பழனியில், சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பகுதியில் இடும்பன்குளம் உள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளத்தில் புனித நீராடிய பின்னரே சாமி தரிசனத்துக்கு செல்கின்றனர். குளத்தில் நீராடும் பக்தர்கள் தங்கள் உடைகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் குளத்தின் நீர்ப்பிடிப்பு, படித்துறை பகுதியில் குப்பைகளாக காணப்பட்டது. இதையடுத்து குளத்தை சுத்தப்படுத்த பழனி பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆர்.டி.ஓ. அழைப்பு கொடுத்தார்.
அதன்படி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் குளத்தை சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது. இதில் தீயணைப்பு படையினர், சிவகிரிப்பட்டி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக காலை 10 மணிக்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு வந்தபோது, குளத்திற்கு யாரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சிவக்குமார், வேட்டியை கட்டி குளத்தில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து சிவகிரிப்பட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் அங்கு வந்து அவருடன் இணைந்து குளத்தை சுத்தம் செய்தனர். ஆர்.டி.ஓ.வின் இந்த செயலை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.