மத்திய அரசின் பங்களிப்பை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது

மத்திய அரசின் பங்களிப்பை தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-06-02 18:45 GMT

ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற பொறுப்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒருமாத காலம் அனைத்து பா.ஜ.க. பொறுப்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தேசிய தலைவர் நட்டா உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து பொறுப்பாளர்களை கொண்ட குழுக்கள் அமைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களை நோக்கி பிரசாரம் செய்ய உள்ளோம். இந்த பணியில் 16 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். உலகின் வழிகாட்டியாக பிரதமர் மோடி வரவேண்டும் என்று அனைத்து நாடுகளும் அவரை பாராட்டுகின்றன. கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. தற்போது மத்திய அரசின் திட்டம் நேரடியாக மக்களை சென்றடைகிறது. இதனால் உலகில் உயர்ந்த நாடுகள் வரிசையில் முதல் 5 இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சியை நோக்கிய பாதையில் இந்தியாவை பா.ஜ.க. செல்ல வைத்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மத்திய அரசின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது. இவ்வாறு கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாய அணி மாநில செயலாளர் பிரவீன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், கணபதி, ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு, மாவட்ட பார்வையாளர் குமரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்