பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரம்: வீடியோ வெளியிட்டவர் கைது

சிதம்பரம் பகுதியை சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-11 03:37 GMT

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைரலாகும் அந்த வீடியோவில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே உள்ள பயணியர் நிழற்குடையில் சீருடையில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவர் வந்து அமர்கிறார். அப்போது அங்கு வந்த கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவியின் அருகில் அமர்கிறார். பின்னர், மாணவியின் கழுத்தில் அந்த மாணவர் தாலியை கட்டினார். அருகில் நின்ற மாணவியின் தோழிகள் சிலர் அவர்களுக்கு அட்சதையை தூவி வாழ்த்துகளை தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த வீடியோவை பாா்த்து அதிர்ச்சியடைந்த சிதம்பரம் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான பாலாஜி கணேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்