மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி

மயிலாடுதுறை அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.

Update: 2022-12-17 18:45 GMT

மயிலாடுதுறை அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.

பாலிடெக்னிக் மாணவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(வயது 17). இவர், மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கல்லூரி முடிந்து நண்பர்கள் 2 பேரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு லோகேஸ்வரன் மயிலாடுதுறை நோக்கி வந்துள்ளார். மூங்கில்தோட்டம் பால்பண்ணை என்ற இடத்தில் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடியது. அப்போது நாய் மீது மோதியதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள கோவில் சுற்றுச்சுவர் கேட்டின் மீது மோதியது.

பரிதாப சாவு

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற திருவிளையாட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா, கும்பகோணத்தை சேர்ந்த கிருஷ்ணா ஆகிய 2 மாணவர்களும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லோகேஸ்வரனின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்