காளை முட்டியதில் பாலிடெக்னிக் ஊழியர் சாவு
வேலூர் அருகே நடந்த மாடு விடும் விழாவில் காளை முட்டியதில் படுகாயம் அடைந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் பலியானார்.
மாடுவிடும் விழா
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லிபாளையம் கிராமத்தில் மாடு விடும் விழா கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தபடி சென்றன. விழாவையொட்டி அந்த பகுதியில் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளுக்கு வெளியே நின்று இளைஞர்கள் மற்றும் மாடியில் இருந்து பொதுமக்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்து காளைகளை உற்சாகப்படுத்தினார்கள். சில இளைஞர்கள் தடுப்புகளை தாண்டி நின்று ஆரவாரம் செய்தனர்.
பாலிடெக்னிக் ஊழியர் பலி
மாடுவிடும் விழாவில் சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் குடியாத்தம் தாலுகா எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (வயது 28) என்பவரும் ஒருவர். இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். மருதவல்லிபாளையத்தில் நடந்த மாடுவிடும் விழாவை காண சுரேஷ் சென்றுள்ளார். அவர் தடுப்புகளை தாண்டி நின்றபடி ஆரவாரம் செய்ததாக கூறப்படுகிறது.
பாலிடெக்னிக் ஊழியர் பலி
அப்போது சீறிப்பாந்து வேகமாக வந்த காளை ஒன்று சுரேஷ் மார்பு மீது மோதியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது காளை மாடும் விழுந்தது. பின்னர் உடனடியாக சுதாரித்து எழுந்த காளை மீண்டும் சுரேஷின் மார்பு பகுதியில் மிதித்துவிட்டு சென்றது. இதில், படுகாயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுரேசிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் வைரல்
மருதவல்லிபாளையம் கிராமத்தில் நடந்த மாடுவிடும் விழாவில் சுரேஷ் மீது காளை மாடு மோதியதில் அவரும், அதன் பின்னர் காளையும் கீழே விழும் காட்சிகளும், சுரேஷ் மார்பு மீது காளை மிதித்து எழுந்து செல்லும் வீடியோ காட்சியும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.