பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் ரூ.7 கோடியில் புதிய பஸ் நிலைய பணிகள் தொடக்கம்

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் ரூ.7 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கி உள்ளது.

Update: 2023-04-17 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் ரூ.7 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கி உள்ளது.

புதிய பஸ் நிலையம்

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் எதிர் எதிரெ செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகன பெருக்கத்தால் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி சி.டி.சி. மேட்டில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு நகராட்சி மூலம் கருத்துரு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று பஸ் நிலையம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் கவுதமன், என்ஜினீயர் குருசாமி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

3.83 ஏக்கர் பரப்பளவு

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சி.டி.சி. மேட்டில் 3.83 ஏக்கர் நிலம் பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது.

பஸ் நிலையத்தில் 64 கடைகள், 40 பஸ்கள் நிறுத்தும் வகையில் (பஸ் ரேக்) கட்டப்படுகிறது. தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த நுண் உரமாக்கல் மையம் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகளை விரைவில் முடிக்கவும், அதே நேரத்தில் பணிகள் தரமானதாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்