கொடுத்த கடனுக்கு அதிக வட்டி வசூல் செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
திருச்சிற்றம்பலம் அருகே கொடுத்த கடனுக்கு அதிகமாக வட்டி வசூல் செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம் அருகே கொடுத்த கடனுக்கு அதிகமாக வட்டி வசூல் செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடன் வாங்கினார்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது57). அ.தி.மு.க. பிரமுகர்.
துலுக்கவிடுதி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் காமராசு(49). இவர், பாலசுப்பிரமணியனின் உறவினர். காமராசு தனது தேவைக்காக ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை பாலசுப்பிரமணியனிடம் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு வட்டிக்கு வாங்கினாா். இந்த கடனுக்கு ஆதாரமாக 6 காசோலைகளை பாலசுப்பிரமணியனிடம் காமராசு கொடுத்தார்.
வட்டி
இந்த கடனுக்கு ரூ.19 லட்சம் வரை வட்டியாக காமராசுவிடம் இருந்து பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். அசல் தொகை 13 லட்சத்து 50 ஆயிரம் அப்படியே இருந்தது.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது இல்ல காதணி விழாவை நடத்திய காமராசு, தனக்கு சீர்வரிசையாக வந்த நகைகளை விற்பனை செய்து அசல் தொகையில் ரூ.11 லட்சத்தை பாலசுப்பிரமணியனிடம் கொடுத்தார். மீதி இருந்த ரூ.2½ லட்சத்தை பாலசுப்பிரமணியன் கேட்டு காமராசுவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
வக்கீல் நோட்டீஸ்
இதற்கிடையே தான் அதிகமாக வட்டி கொடுத்துள்ளதால் கொடுக்க வேண்டிய அசல் தொகை ரூ.2½ லட்சத்தில் ரூ.1½ லட்சத்தை கழித்து விட்டு ரூ.1 லட்சம் தருவதாக காமராசு, பாலசுப்பிரமணியனிடம் கூறியுள்ளார்.அதை ஏற்காத பாலசுப்பிரமணியன், காமராசுவிடம் இருந்து ஏற்கனவே தான் பெற்று வைத்திருந்த 3 காசோலைகள் மூலம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் என நிரப்பி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் தூரங்குடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் வாயிலாக காசோலைகளை முருகானந்தத்தின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய பாலசுப்பிரமணியம் ஏற்பாடு செய்தார். ஆனால், காமராசுவின் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது. இது தொடர்பாக காமராசுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
கைது
இதனால் மனமுடைந்த காமராசு இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் பணம் கொடுத்தல் மற்றும் வாங்கல் தொடர்பான முழுமையான ஆவணங்களையும் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் சமர்ப்பித்தார்.அதன் பேரில், போலீசார் பாலசுப்பிரமணியன், அவரது கூட்டாளி முருகானந்தம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகானந்தத்தை தேடி வருகிறார்கள்.