கோவை
கோவையில் போக்குவரத்து போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி செய்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போக்குவரத்து போலீஸ்காரர்
மதுரையை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 28). இவர் கோவையில் உள்ள சாய்பாபாகாலனி பகுதியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவருடைய மனைவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
ரங்கராஜ், கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் இருக்கும் குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாலும், அவர் குடியிருப்பது 2-வது மாடி என்பதாலும் அவர் ஏறி படியேறி இறங்க சிரமம் ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
எனவே அவரை மதுரை மேலூரில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ரங்கராஜ் கோவை வந்தார். அத்துடன் அவர் தரைத்தளத்தில் இருக்கும் வீடு பெற முயன்றும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவைியை தன்னுடன் அழைத்து வரமுடியவில்லையே என்ற மன வருத்தம் அவருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரங்கராஜ், மிக மனவருத்தத்துடன் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், தற்கொலை செய்வதற்காக தூக்கில் தொங்கினார். உடனே அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் ரங்கராஜ் தற்கொலை செய்து கொள்ள முயன்றதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.