பணியின்போது போலீஸ்காரருக்கு திடீர் நெஞ்சுவலி; ஆஸ்பத்திரிக்கு சென்று காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. நலம் விசாரிப்பு

பணியின்போது போலீஸ்காரருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரரை காஞ்சீபுரம் மண்டல டி.ஐ.ஜி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Update: 2022-07-25 10:04 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 21-ந் தேதி முதல் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசினம் செய்தனர். விழாவையொட்டி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவின் 4-வது நாளான நேற்று மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியில் காஞ்சீபுரம் மாகரல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் டில்லிபாபு (வயது 30) என்ற போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த போலீசார் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம், ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காஞ்சீபுரம் மண்டல டி.ஐ.ஜி. சத்யபிரியா திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ்காரர் டில்லிபாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யான், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரிணித் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்