காவலர் பணிக்கான தேர்வில் 312 பேர் தகுதி
காவலர் பணிக்கான தேர்வில் 312 பேர் தகுதி பெற்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2022-ம் ஆண்டுக்கான போலீஸ் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை 2-ம் நிலை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்திறன் தேர்வு நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 987 பேருக்கு உடல்திறன் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் நடந்த முதல்நாள் தேர்வில் 400 பேர் அழைக்கப்பட்டதில் 55 பேர் கலந்து கொள்ளவில்லை. மீதம் உள்ள 345 பேருக்கு தேர்வு நடைபெற்றது. நேற்று 2-ம் நாளாக 400 பேர் அழைக்கப்பட்டதில் 42 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. இவர்களுக்கு மார்பளவு, சான்றிதழ் சரிபார்த்தல், 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் 312 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. உடல்திறன் தேர்வினை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் நடத்தினர். உடல்திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 9-ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.