திருச்செந்தூரில் போலீஸ் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினர்- போலீசார் வாக்குவாதத்தால் பரபரப்பு

திருச்செந்தூரில் போலீஸ் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-06-02 16:58 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் போலீஸ் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணி

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் திருச்செந்தூரில் நேற்று மாலையில் பேரணி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மாலையில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி தலைமையில் ஏராளமான மகளிரணியினர் மற்றும் நிர்வாகிகள் திரண்டிருந்தனர்.

அப்போது பா.ஜ.க. மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், மாநில வர்த்தகரணி தலைவர் ராஜக்கண்ணன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருக ஆதித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.

வாக்குவாதம்

இதன்பின்னர் பா.ஜ.க. மகளிரணியினர் பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பேரணி திருச்செந்தூர் - நெல்லை ரவுண்டானா அருகே வந்தபோது, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து அமைத்து மறித்தனர்.

இதையடுத்து போலீசாரிடம், பா.ஜ.க. மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியில்லாததால் பேரணி செல்லக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஆனால் பா.ஜ.க.வினர் மோடி அரசின் சாதனைகளை தெரிவிக்கும் வகையில் பேரணியாக செல்ல போவதாக தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ.க.வினரை கைது செய்ய போலீசார் ஆயத்தமானார்கள்.

சாதனை விளக்க கூட்டம்

இதனைதொடர்ந்து பா.ஜ.க.வினர் பேரணி செல்லாமல் பஸ்நிலையம் முன்பு சாதனை விளக்க கூட்டத்தை நடத்திவிட்டு செல்வதாக தெரிவித்தனர். பின்னர் சாதனை விளக்க கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதியளித்தனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டமாக நடத்தினர். கூட்டத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி தேன்மொழி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

கூட்டத்தில், மருத்துவரணி மாநில செயலாளர் பூபதி பாண்டியன், மாவட்ட துணைதலைவர் வக்கீல் வாரியார், மாவட்ட பொது செயலாளர் செல்வராஜ், மகளிரணி மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட துணை தலைவர் சரஸ்வதி, நகர மகளிரணி தலைவர் மீனாட்சி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்